Tuesday, October 9, 2012

ஒவ்வொரு ப்ரெண்டும் தேவை மச்சான்....

                                      
Candy : Hi all…… am back….
(பீட்டர் மச்சான் )
சக்தி : ஏய் கேண்டி நீ பேக்குதான் எங்களுக்கு தெரியும்    வா
                               ............ 

விமல்:  ஏண்டி சீதா உங்க செட்ல
 நீ மட்டும் யாரையும் லவ்  பண்ணல ?
சீதா : அச்சச்சோ அப்புறம் அவன் கல்யாண
 மண்டபத்துக்கு வந்து கலாட்டா  பண்ணினா என்ன செய்றது?
                                          ..............
Jene : Girls u all may go back to hostel
                   .......
Class Teacher: Where r the other girls?
Jene : All r gone mam except me…
                                    !!!!!!!!!!!!!!!!!!!!!!
இப்டியும் ஒரு ப்ரெண்டும் தேவை மச்சான்....
                          இணைபிரியாமல் இருந்த நண்பர்களிடம்...கலகலப்பான சந்தோஷமான நட்புகாலத்திற்குள் அழைத்து சென்று விட்டது இந்த சாதாரண விளம்பரப் பாடல்.
All my Rehab sweeties 
 Plzz Share your unforgettable Memories in this blog to make this more fabulous…
**********************

           எங்கள் Bpcl - இல் மதிப்பிற்குரிய திரு. கண்ணபிரான் என்றொரு Planning Officer இருக்கிறார்.  பங்க் ஆரம்பித்த புதிதில் Load எடுப்பதற்கான சில நிர்வாக வழிமுறைகள் பரிட்சயமாகாததால்  ஏற்பட்டுவிடும் சில தவறுகளுக்காக  இவர் என்னை மிகவும் கடிந்து கொள்வார். 
              தொலைபேசியின் மறுமுனையில் அவர் 
கோபமாக திட்டிக்கொண்டே இருப்பார். மறுமுனையில் கணக்கு வாத்தியாரிடம் குட்டு வாங்கிய மாணவி போல் நான் கேட்டு கொண்டிருந்துவிட்டு எங்கள் Sales Officer  - ஆன திரு. வெங்கடேசன் சார் அவர்களை தொடர்பு கொண்டு உதவி கேட்பேன். அவர் சிரித்துவிட்டு "கண்ணபிரான் சார் உங்க பிரெண்ட் ஆச்சே அப்படி எல்லாம் திட்டமாட்டாரே " என்று சமாதானமாக கூறுவார். அதன் பிறகு நேரங்கெட்ட நாட்களில் நான் Load வேண்டும் எனும்போதெல்லாம் " நான் சொல்கிறேன் உங்க பிரெண்ட் இருந்தா நிச்சயம் போடுவார் " என்று கூறுவார் வெங்கட் சார். .
             
 என்னால் தவிர்க்ககூடிய சந்தர்ப்பங்களின், எனக்கு அறிமுகம் இல்லாதவர்களின் கோபங்களை எதிர்கொள்வதென்பது இதுவரை இல்லாத புதிய வருத்தமான அனுபவங்களாக எனக்கு இருந்த பொழுதுகளில் நட்பென்ற,சொல் மூலம் அவற்றை மாற்றிய 
அற்புதமான நண்பர் வெங்கட் சார் அவர்கள். 
                        பச்சை தங்கமென்ற வர்த்தக கடலில்  திசை  தெரியாமல் நாங்கள் தவித்து நிற்கையில் எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் சரியான ஆலோசனைகளை வழங்கியது மட்டும் இல்லாமல் இன்று வரை எல்லோருக்கும் தன் வரம்பிற்கு உட்பட்ட உதவிகளை செய்துவரும் இந்த நண்பர் பற்றி எழுத இன்னொரு இடுகை வேண்டும்.

"சுமுகமான சூழலை உருவாக்கி மன இறுக்கங்களை போக்கி விடும் நட்பென்ற சொல்லே அலாதியானது!!!!!!"
         விளம்பரத் துறையில் புகைப்பட கலைஞனாக பணியாற்றி வருகிறான் மனோ.   வலைதள நண்பர்கள் இப்படிதான் இருப்பார்கள் என்ற விமர்சனங்களைக் கடந்து கண்ணியமானதோர் நட்பை  இன்றுவரை தொடர்பவன். எந்த பொய்களுமற்று மிக சிறந்ததொரு மரியாதையை எனக்களித்த இந்த
நண்பனை நான் இதுவரை நேரில் சந்தித்ததில்லை. ஏதோ ஒரு நம்பிக்கையில் பகிர்ந்து கொள்ளப்படும் கனவுகள், சந்தோஷங்கள், கவலைகள், இன்னும் எத்தனையோ...

        "சந்தேகங்களுக்கு அப்பாற்பட்ட நம்பிக்கைதான் நட்பா? எனில் இடம், காலம்,தூரம் இவற்றை கடந்து மனிதர்களை இணைப்பது நட்பில் மட்டுமே சாத்தியமாகிறது." 
      
                   கல்கி மற்றும் மு.வ இவர்களின் சமூக நாவல்களை  படிக்கும் போதெல்லாம் நான் நினைப்பேன் இவர்களது கதைத் தலைவிகளைப் போல பெண்கள் இன்னும் இருப்பார்களா என்று... நாட்கள் செல்ல செல்ல இவர்களின் கருத்துக்கள் மனதில் பதியப் பதிய அந்த நாயகிகளை என் வாழ்விலேயே சந்தித்தேன். முதலில் என் அம்மா . பின்பு  ப்ரீதா ! பல திறமைகளை கொண்டிருந்தும் எந்த ஆர்ப்பாட்டங்களும் இல்லமால் அமைதியான  , எளிமையான  தனது உதவி தலைமை ஆசிரியர் பணிகளுக்கிடையிலும் தன்னால் முடிந்த  கல்வி சேவையை கிராமத்து ஏழை  மாணவர்களுக்கு செய்து வரும் இந்த சிநேகிதியிடம் நேரம் போவதே தெரியாமல் பலவற்றை விவாதம் செய்வது எனக்கு மிகப்பிடித்தமான ஒன்றாகும் .  

"ஒத்த கருத்துடைய நண்பர்கள் நீண்ட காலம் 
இணைபிரியாமல் இருப்பது  வாய்க்குமானால் 
அது கடவுளின் பரிசு."   
                     திரு. வெங்கட் சார் , மனோ, ப்ரீத்தா  இந்த மூவருமே நான் மட்டுமில்லாமல் எத்தன்மையானவரும் சிநேகம் கொள்ள விரும்பும் நம்பிக்கைக்குரியவர்கள். தங்களை சுற்றி மிக சிறந்ததோர் மாற்றங்களை செய்யக்கூடியவர்கள். தங்களது இனிமையான நட்பால் என்றென்றும் நமது எண்ணங்களில் உயிர்ப்புடன் இருப்பவர்கள்.

                     நான் எதிர்பாராத தருணத்தில் எனக்கு கிடைத்த இந்த மூன்று நண்பர்கள் பற்றி பகிர்ந்து கொள்வதன் மூலம் இந்த இடுகையை மேலும் மதிப்புற செய்ய விரும்புகிறேன்.

                       நண்பர்கள் தினத்திற்கான இடுகை. நேரம் இல்லாததால் சற்றே தாமதாமாகிவிட்டது அதனால் என்ன....... நல்ல நண்பர்கள் இருக்கையில் எல்லா நாட்களுமே நண்பர்கள் தினம்தான்.









 

தேர்தல்(தெரு) கூத்து

                    லெ.மு அவர்கள் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட அறிவித்ததும்
எங்கள் தெரு அல்லோலகலப்பட ஆரம்பித்துவிட்டது. சென்றமுறை தாமரையை நேசித்த
அவர் தற்போது சூரியனை வணங்க உத்தேசம் கொண்டார். கடலில் தூக்கி வீசினாலும் கட்டையாய் மாறும் அக்கட்சி
அவர் வீசிய லட்ச ரூபாயை கட்சிதமாக கவ்விக்கொண்டு அதுநாள் வரை கட்சிக்கு
தொண்டு செய்து வந்த காமராசரை(!!!!!)   நிராகரித்து லெ .மு அவர்களுக்கு இடம்  கொடுத்தது.

            கடுமையான போட்டியில் சென்றமுறை 6 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற லெ.மு  இந்த முறை சுயேட்சையாக நிற்கும் அந்த போட்டியாளரை தோற்கடிக்க பல ராஜதந்திரங்களை கையாண்டார். அதில் ஒன்று காமராசரின் வேண்டப்பட்ட விரோதியான (குடும்ப பகை உறவினர்) ஒருவரை பணம் கொடுத்து அதே வார்டில் தென்னை மர சின்னத்தில் போட்டியிடச் செய்தார்.

                    அதிலும் ஒரு உபாயம் செய்து தென்னைமர சின்னத்தில் நின்ற அவரை வீட்டிற்கொரு தென்னைமரம் வழங்க செய்தார். தென்னங்கன்றுகள் ஜோடியாக வைக்கப்படுவதுதான் சம்பிரதாயம். விடிந்து எழுந்ததும் வாயில் வெற்றிலையைவேறு அடக்கிக் கொண்டு வீடு வீடாக ஒற்றை தென்னைமரத்துடன் ஓட்டு கேட்கச் சென்று தாய்மார்களின் ஏகோபித்த வெறுப்பை சம்பாதித்து தானும் ஜெயிக்காமல் உறவினரையும் ஜெயிக்கச் செய்யாமல் ஓட்டைப் பிரிக்கும் வேலையை கட்சிதமாக செய்து முடித்தார் தென்னைமர போட்டியாளர்.

               இவ்வாறாக துணிக்கடை துளசி அண்ணன், மறவர் தெரு மனோகரன் மாமா, கொத்தனார் மணி அண்ணன் முகம் தெரிந்தவர் தெரியாதவர் என பலரும் தேர்தலில் களம் இறங்கி கலக்கிக் கொண்டிருந்தார்கள். சம்பிரதாயமான வாக்குறுதிகளும், இன்னபிற தேர்தல் பேரங்களும் உறுதியளிக்கப்பட்டு ஒரு வழியாக தேர்தல் முடிவுகளும் வெளியாகின. அவரவர் உழைபிற்கேற்ற வெற்றிகளைப் பெற்றனர்.

               மற்றவர்கள்    "அதான்  தோத்துட்டம்ல ஒழுங்கா  வாங்கினத கொடுத்துருங்க"  என்று முடிந்த வரையில் வசூலுக்கு கிளம்பினர்.

         கோமாளி இல்லாத கூத்தா என்ன? ஒவ்வொரு முறையும் சலிக்காமல் தேர்தலில் நின்று வழக்கம் போல தோற்கும் திருவள்ளுவர் தெரு லூனா மாமா பெற்ற வாக்குகள்  104. செல்லாத ஓட்டுகள் 108. எப்போதும் செல்லாத ஓட்டுக்கும் அவருக்கும்தான் போட்டா போட்டி.


                ம்ஹும்.... எல்லா ஆரவாரங்களும் முடிந்தன. "அண்ணா"  "அக்கா " "மாமா"  "பெரியப்பா"  என அன்போடு கூறிக்கொண்டு "தாயாக பிள்ளையாக" பழகிய வெற்றி பெற்ற பதவியாளர்களின் வீடுகளுக்குள் இனி சுலபமாக நுழைய முடியாது.

         எத்தனையோ அரசியல் துரோகங்களும், மக்களுக்கெதிரான ஊழல்களும் இந்நாட்டில் அரங்கேறிய வண்ணம்தான் உள்ளன. நேரிடையாகவோ, மறைமுகமாகவோ மக்களின் உரிமைகளும், வசதிகளும் பறிக்கப்பட்டுதான் வருகிறது. அனால் அவற்றுக்கு காரணமான அரசியல் தலைவர்கள் அதிகார வர்கத்தினர் எங்கோ வாழ்பவர்கள், எங்கள் முகங்களை அறியாதவர்கள்.  இவர்கள் நம்பிக்கையற்றவர்களாய் இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

           
           ஆனால் எங்கள் வார்டு கவுன்சிலர் அன்பர்கள் எங்களுடன் வாழ்பவர்கள்,நேற்றுவரை அன்றாட பிரச்சனைகளை எங்களுடன் சந்தித்தவர்கள் 
  ஆனால் இன்றோ அண்டை அயலாருடனே அந்நியப்பட்டு தாங்கள் இணைந்திருக்கும் கட்சியில் அடுத்தடுத்து தங்கள் பதவிகளை நிலைநிறுத்திக் கொள்வதில் மட்டுமே முனைப்பாய் உள்ளனர்.

       தாங்கள் வசிக்கும் தெருக்களில் கூட மாற்றங்களை கொண்டுவர முடியாத இவர்கள் அரசியலில் ஈடுபட்டதன் நோக்கம் என்னவாக  இருந்துவிட முடியும்????????????

             
             நகரமன்ற நாட்டமையின் பேரத்தால் எங்கள் நகரின் பாதாள சாக்கடை திட்டம் அதல பாதாளத்திற்குப்  போய்விட்டது.  மழை காலங்களில் தேங்கும் கழிவு நீரால் பரவும்  தொற்று
நோய்கள் ,கோடையில் குடிநீர் தட்டுப்பாடு  இன்னும் எத்தனையோ சங்கடங்கள் எல்லாம்
சகஜமாகிப் போனது.
 

    எல்லா கூத்துக்களையும்  விட கொடுமையாய்  இருந்தது என் அப்பாவி பாமரன் மிஸ்டர் பொதுஜனம் இருவர் பேசிக்கொண்டிருந்தது  "அடுத்த முற தலைக்கு ஆயிரத்தைநூறு வாங்கிரனும்யா ஏன்னா நம்மளாலதான இந்தப் பயலுவ நாலு காச பார்க்குரானுக  "

 " ...... நெஞ்சு பொறுக்குதில்லையே.........."
     
                       
          



        

Tuesday, September 20, 2011

" உயிர்ப்பென்பது யாதெனப்படுவதில்...."

ஜெயலெட்சுமி பேருந்து வந்து கொண்டிருந்தது பெத்தனி ஹாஸ்டல் தேவதைகளை ஏற்றிச் செல்ல. வயலூரிலிருந்து காலியாக வரும் அது இனி தில்லை நகர் வழியாக மாரிஸ் தியேட்டர் பாலம் தாண்டி செயின்ட் ஜோசப் சர்ச் வாசலில் சென்று நிற்கும். காலை நேரம் பெரும்பாலும் மாணவர் கூட்டம்தான். ஒரே வண்ண பட்டாம்பூச்சிகள் போல பள்ளி மாணவர்களும்… பல வண்ணங்களில் கல்லூரி மாணவர்களும் தங்கள் கல்வி சாலைகள் நோக்கி விரையும் ரம்யமான காட்சி.

கல்லூரி படிப்பிற்காக திருச்சி வந்து சேர்ந்த முதல் நாள் மிகவும் பயமாகவும் பரபரப்பான வாழ்க்கையோடு ஒட்ட முடியாமல் மனம் தனிமையை உணர்ந்தது. ஒவ்வொரு நாளின் அனுபவமும், அற்புதமான கல்வியும், புதிய நட்பும் மெல்ல மெல்ல கல்லூரி வாழ்க்கையை இயல்பாக்கி இப்போதும் மறக்க முடியாத இனிமையான காலமாக அதை மாற்றிக் கொடுத்தது.

கல்லூரி வந்துவிட்டது. சென்னை சில்க்ஸ் பணியாளர்கள் சுறுசுறுப்புடன் பணிக்கு விரைந்து கொண்டிருந்தார்கள். சில பழகிய முகங்கள் புன்னகையுடன் கடந்தது… தலையசைத்துவிட்டு கல்லூரிக்குள் நுழைந்து ஆடிட்டோரியம் நோக்கி நடந்தேன்.

இன்று கடைசி செமினார். நான் “மானுட தொடர்பியல் சுழற்சி” (Human Communication Cycle) பற்றிய சில தத்துவார்த்தமான சிந்தனைகளை முன் வைத்து முடித்தேன். அதன் சுருக்கமான விளக்கம் இதுதான். “மானுட தொடர்பியல் சுழற்சியில் முன் வைக்கப்படும் நிகழ்வுகள், அதன் தொடர் சம்பவங்கள், கேள்விகள், பதில்கள், எல்லாம் மனித மனதின் ஆழ் மனதிலிருந்தே தொடங்குகிறது, முடிவும் அடைகிறது” மனதின் அற்புதமான இந்த சக்தி நிரூபிக்க முடியாத ஆனால் மறுக்க முடியாத உண்மை.

அனைவரும் வரிசையாக முடித்து ஆய்வறிக்கைகளை சம்ர்பித்தோம். இனி இவைகள் பல்கலைகழகங்களுக்கு அனுப்பப் பட்டு மதிப்பிடப்படும். இன்று கடைசி நாள். கலங்கிய விழிகளுடன் ஒருவரோடொருவர் விடைபெற்று வெளியேறினோம்.

நண்பகல் வெயிலில் தங்கமாய் ஜொலித்த கொன்றை மலர்கள் மைதானத்திற்கு மஞ்சள் குடை பிடித்தது போல் இருந்தது. மைதான மரங்கள் நோக்கி சென்று சிறிது நேரம் அமர்ந்து விடைபெற்றேன்… பரீட்சைக்கு என்னுடன் படித்த மரங்கள் , தொலைவில் இருக்கும் தாயுமானவர், ஆசிரியர்கள், நண்பர்கள், கல்லூரி நூலகம், மரங்கள் அடர்ந்த தில்லைநகர் சாலை, ஈடன் கார்டன் (இப்போது பெயர் மாற்றிவிட்டார்கள் ) பேருந்து நண்பர்கள் , கொட்டும் மழையில் காவிரிப் பாலம் , பௌர்ணமி நிலவில் நனைந்த காவிரி அணைத்த திருச்சியின் ஓவியம் போன்றதான அழகைக் காட்டும் உச்சிபிள்ளையார் கோவில் அரச மரத்தடி, பிளாசம் ஸ்பெஷல் ஸ்கூல்… ஒரு கணம் எல்லாம் மனதில் வந்து சென்றது.

யோசித்தபடியே கடைசியாய் ஒருமுறை கல்லூரியை திரும்பிப் பார்த்துவிட்டு கிளம்பினேன். செமினாரை முடித்து வெளியேறுகையில் ஒரு முகம் அடிக்கடி நினைவில் வந்தது. அது ஜெயலெட்சுமி பேருந்தில் எனது சீட்டிற்கு எதிர்புறம் டிரைவர் சீட்டிற்கு பின்புறம் மாட்டப்பட்டிருக்கும் முப்பதைத் தாண்டிய வயதில் ரோஜாநிற சட்டையணிந்து முகம் முழுவதும் புன்னகையுடன் ஒரு நபரின் மார்பளவு புகைப்படம் .

பல நாட்கள் பல முறை எத்தனையோ கண்ணீர் அஞ்சலி செய்திகள் நினைவஞ்சலி செய்திகள் பார்த்திருப்போம். ஆனால் இந்த புகைப்படம் போல எதுவும் என்னை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டியதில்லை. அல்லது தினமும் அந்த பேருந்தில் அதே இருக்கையில் பயணம் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததால் அதை நான் பழக்கப்படுத்திக் கொண்டேனா என்று தெரியவில்லை. பெரும்பாலும் அதை பார்க்கும் பொது அதை நோக்கி மனதில் எழும் கேள்விகள் … இவர் யார் ? பெயரென்ன ? எங்கே யாருடன் எப்படியெல்லாம் வாழ்ந்திருப்பார்?
என நீளும் இந்த கேள்விகளுக்கு என்றேனும் விடை கிடைக்குமா ?

திரௌபதி அம்மன் கோவில் வாசலில் ஒரு மனநிலை சரியில்லாத பெண்மணி காய்ந்த மலர் சரங்களை சேகரித்துக் கொண்டு , சூடிகொண்டும் சுற்றிக் கொண்டிருப்பார் . “Help Thy Neighbours” மெம்பர்களான நானும் சகோதரி ஜித்தாவும் யார் சொல்லியும் கேளாமல் அவரை மனநல காப்பகத்தில் சேர்க்க நினைத்து ஒரு நாள் அருகில் நெருங்கினோம். எங்களை லட்சியம் செய்யாமல் யாரையோ இந்த உலகின் அனைத்து கெட்ட வார்த்தைகளையும் பிரயோகித்து சபித்துக் கொண்டிருந்தார். அவர் கவனத்தை எங்கள் மீது ஈர்க்க கோவில் வாசலிலிருந்த பூக்கடைகளில் இருந்து நிறைய மலர்களை வாங்கி அவர் முன்பு நீட்டினேன். திட்டுவதை நிறுத்திய அவர் ஒரு கணம் நிமிர்ந்து என்னை குறிப்பாக என் கண்களை பார்த்தார். திடீரென ஓலமிட்டு அழுதவாறு சென்றுவிட்டார். . சில நாட்களுக்கு பிறகு மாலை நேரம் அடிக்கடி அவர் ஹாஸ்டல் பக்கம் வந்து பார்பதாக வாட்ச்மேன் சொன்னதாக ஜித்தா சகோதரி சொன்னார். அதிலிருந்து கார்த்தியோட சிநேகிதி என்று எல்லோரிடமும் சொல்லி கேலி செய்வார்.

எந்த வார்த்தைகளும் இடம் பெறாத அந்த மௌன தொடர்பியல் சுழற்சியில் அவர் என்னை என்னவாக புரிந்திருப்பார் ?

தினமும் புத்தூர் நான்கு வழி சாலை திருப்பத்தில் ஜன்னல் வழி புத்தகங்களை கொடுத்துவிட்டு படியில் பிரயாணித்து சர்ச் வாசலில் இறங்கி புத்தகங்களை வாங்கி செல்லும் அந்த +2 பையன் இரண்டு நாள் முன்பு நிறைய ரோஜா மலர்களைக் கொடுத்துவிட்டு திரும்பி பார்த்து கன்னம் குழிய சிரிப்புடன் உங்களுக்குத்தான் என்று சொல்லிவிட்டு கூட்டத்தில் விரைந்து மறைந்துவிட்டான். அவனை இனி என்றேனும் பார்ப்பேனா ?

இன்னும் எத்தனை எத்தனையோ கேள்விகள் , நிகழ்வுகள் , மனிதர்கள் …. திருச்சியுடனான எல்லா தொடர்பியல் சுழற்சியும் இன்றுடன் முடிகிறது.
ஹாஸ்டல் திரும்பி எனது எல்லா பொருட்களையும் எடுத்துக்கொண்டு காலியான அறையைப் போல் வெறுமையான மனதுடன் ஊர் திரும்பினேன் .

“ நீண்ட பயணத்திற்கு பின்பு மிகவும் சுகமானது அமைதியான வீடு ” லெனின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தின் வாசகங்கள் இவை. எத்தனை உண்மையான வார்த்தைகள்..!!!! வாசலில் வந்து வரவேற்றது அம்மாவின் சமையல் வாசனை. நாட்கள் அமைதியாக கழிந்தது. ஒருவழியாக மாணவப் பருவம் முடிந்தது. வெகு நாட்களுக்கு பின்பு ஆழ்ந்து தூங்கினேன்.

மழைவரும் போல் இருந்தது . மேகங்கள் வீசி எறியப்பட்ட பந்து போல் வேகமாய் நகர்ந்து கொண்டிருந்தது. யாரேனும் விளையாடுகிறார்களோ ?!?!?! கருமை படர்ந்த வானில் மிகக் கூர்மையாக மின்னல் தெறித்து கொண்டிருந்தது . முதலில் நான் என் வீட்டு மாடியில் நின்றுதான் பார்த்துக்கொண்டிருந்தேன் . சிறிது நேரம்மாக ஆக சுற்றுப்புற சுவர்கள் , வீடுகள் எல்லாம் காற்றில் கரைந்து போயின. நான் மிகப் பெரும் வெளியில் இந்த உலகின் ஒற்றை உயிரினம் போல் நின்று கொட்டிக் கொண்டிருந்த பிரபஞ்சத்தின் பேரழகைப் பார்த்துக்கொண்டிருந்தேன். மழை பெய்ய தயாராகிக் கொண்டிருந்த வானம் , அதன் மின்னல் , இடி , காற்று , ஆழிப் பேரலையின் சுழல் போல் திரண்டிருந்த மேகங்கள் திடீரென கார்மேகங்கள் கரு விழிகளைப் போல் என்னை உற்றுப் பார்த்தது எங்கேயோ பார்த்த கண்கள் ?!?!?! என்னை நோக்கி எதோ சொன்னது . உணர மட்டும் , முடிந்த அந்த வார்த்தைகளைக் கேட்க முடியாமல் யாரோ என்னை பலமாக அழைத்தார்கள்.

வியர்த்துக் கொட்டி கண்விழித்துப் பார்த்தேன் “எவ்வளவு நேரம் தூங்குவாய் உடம்பு சரி இல்லையா ?” என்று கேட்டபடி அம்மா அறைக்குள் நுழைந்தார்கள். சட்டென கலைந்த தூக்கத்தால் தலை வலித்தது . அம்மா கொடுத்த காபியை வாங்கிக்கொண்டு வாசலுக்கு வந்தேன். முற்பகல்நேர தனிமையில் இருந்தது வீதி. வாழை மரங்களின் இலைகளில் ஒட்டியிருந்த நீர்த்துளிகளில் சிறகு நனைத்து விளையாடிகொண்டிருந்தன சிட்டுக் குருவிகள்.
அன்றைய நாளிதழைப் படித்தபடி நாற்காலியில் அமர்ந்தேன். அதில் வெளியாகியிருந்த ஒரு விளம்பரம் என் சப்த நாடிகளையும் ஒடுங்கச் செய்தது . ஜெயலட்சுமிப் பேருந்தில் நான் பார்த்த அதே புகைப்படம் . ஒரு மகன், மகளுடன் உறையூரில் வாழ்ந்த சிவா என்ற அவருக்கு மூன்றாமாண்டு அஞ்சலியாக நண்பர் யாரோ கொடுத்திருந்த விளம்பரம். அதே புகைப்படம் … அந்த கண்கள்… காலை கனவிலும் வந்த அதே கண்கள்!!!!!!!!!! மௌனமாய் எனக்குச் சொன்னது….

உயிர்ப்பென்பது யாதெனப்படுவதில் ….”

Wednesday, May 25, 2011

பூவோட அம்மா

நவீன் அறைக்குள் விளையாடிக் கொண்டிருந்தான். தலையணைகளை எல்லாம் ஒன்றின்மீதொன்றாக அடுக்கி ஆசனம் செய்தமர்ந்து சுவற்றில் வரைந்து கொண்டிருந்தான். அறையெங்கும் அவனது விளையாட்டு சிதறிக்கிடந்தது சுவரெங்கும் அவனது உலகம் விரிந்திருந்தது. உற்று பார்த்தேன். வரிசையாய் பெரியதும் சிறியதுமாய் வீடுகள். ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு சூரியன். குழந்தைகளின் அட்டகாசமான கற்பனையை மிஞ்ச எவராலும் முடியாது. பிறகு வீடுகளுக்கு அருகில் மனிதர்கள் சிரித்த முகங்களோடு!!! நின்றிருந்தார்கள். முகத்தில் இரண்டு வட்டங்கள், கண்களைக் குறிக்கும் இரண்டு புள்ளிகள், அதற்கு மேல் புருவங்களைக் குறிக்கும் இரண்டு வளைந்த கோடுகள்.
அப்பாடா நவீன் “ * Darw a Man Test” பாஸ் செய்துவிட்டான். அக்காவிடம் சொன்னால் போடி உனக்கு வேறு வேலை இல்லை என்பாள். மறுவாழ்வியல் படித்ததிலிருந்து எந்த ஒரு குழந்தையின் செய்கையை பார்க்கும் போதும் அது அதனுடைய “ * Developmental Mile Stones ”ஐ எட்டிவிட்டதா என சோதிக்க எத்தனிப்பது இயல்பாகிப்போனது .

விடுமுறை கழிந்து பள்ளி திறப்பதற்குள் ஏழாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு சிறப்பு மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கான “ * Curriculum Designing” செய்து முடிக்க வேண்டும். பாதி வேலை முடிந்த நிலையில் ஒன்று மட்டும் கடினமானதாகவே இருந்தது. அது சாதாரண மனிதர்களாலேயே புரிந்து கொள்ள முடியாத பல சந்தர்பங்களில் மனிதனை தோற்று போகச் செய்யும் மானுட சுழற்சியின் வாழ்வாதாரம் “உறவுகளும் உணர்வுகளும் ” இதை கற்பிப்பது எனக்கு மிகப் பெரும் சவாலாகவே இருந்தது . 12 வயது சிறுமிக்கு நண்பனிடமும், சகோதரனிடமும், அத்தை, மாமன் மகன்களுடனான உறவையும், உணர்வுகளையும் எப்படி விளங்க வைப்பது ?...

கற்றல் என்பது முழுமையடைதல். நான் கற்பித்ததையே தான் அவர்கள் கற்றார்கள் என்பதை நான் அறிந்துகொள்ளும் அளவுகோல் எது? முரண்பாடுகளும் ஏமாற்றங்களும், ஒன்றையொன்று மிஞ்சும் வாழ்க்கை போராட்டங்களும் நிறைந்த இந்த உலகிடமிருந்து என் குழந்தைகளின் மெல்லிய இதயங்களை காப்பாற்ற நான் உறவுகளின் நம்பகத் தன்மையையும் உணர்வுகளின் பலத்தையும் பலவீனங்களையும் கற்பித்தாக வேண்டுமே… எப்படி யோசித்தும் எதுவும் புரியவில்லை…

ஜன்னலின் வழியே மெல்லிய தென்றல் அறைக்குள் பரவியது. செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். திருமணமாகி புகுந்த வீடு சென்ற பிறகு ஜோ எனக்கு அனுப்பி வைத்த முதல் பரிசு ஜெனீவா மலர் விதைகள். அவளுக்கும் எனக்கும் ஏற்பட்டிருந்த வெற்றிடத்தை நிரப்ப வந்த உயிருள்ள பரிசு. பத்திரமாய் வைத்திருந்து தோட்டத்தில் விதைத்து காத்திருந்தேன். ஜோவைப் போலவே மலர்ந்து சிரிக்கும் மலர்களுக்காக. வேலையை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என எழுந்து தோட்டத்திற்கு சென்றேன்.

அங்கே……. ஜெனீவா மலர் செடிகள் வேரோடு பிடுங்கப்பட்டு இலைகளும், மொட்டுகளும் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. அருகில் நவீன் கையில் குச்சியுடன் நின்றிருந்தான். (அவன் பவர் ரேஞ்சராம், செடிகள் எனிமீசாம்…) குற்றுயிராய் கிடந்த செடிகளைப் பார்த்ததும் எனக்கு அழுகை அழுகையாக வந்தது. ஆத்திரம் தொண்டை அடைக்க அம்மா.... என்று கத்தினேன். வந்து பார்த்த அம்மா அவனுக்கு நான்கு அடி கொடுத்தார்கள். செடிகளைப் பார்த்தபடி அங்கேயே அமர்ந்திருந்தேன்.

வீட்டை சுற்றி சுற்றி ஓடி அடி வாங்கிய அவன் என் அருகில் தயக்கத்துடன் வந்து நின்றான். அழாதீங்க சித்தி இனிமே இப்டி செய்ய மாட்டேன் சித்தி என்றான் பரிதாபமாக. அழுது சிவந்திருந்த அவன் முகத்தில் அப்படி ஒரு குற்ற உணர்வு. இருப்பினும் கோபம் தாங்காமல் அவன் பிஞ்சு கரங்களை கோபமாய் உதறிவிட்டு எழுந்து வந்து விட்டேன்.

வீடு சிறிது நேரம் மௌனமாய் இருந்தது. அடி வாங்கியதற்கு மேலாக எனது சிறிய புறக்கணிப்பை தாங்க முடியாமல் அவன் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தான். அம்மா அவனை சமாதானப் படுத்த முயன்று கொண்டிருந்தார்கள். குழந்தையிடம் ஏன் அவ்வளவு கடுமையாய் நடந்து கொண்டோம் என்றிருந்தது. எதுவும் செய்ய மனமின்றி வாசலுக்கு வந்து சற்று நேரம் திண்ணையில் அமர்ந்து தெருவை வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்தேன் . இருள் கவியத் தொடங்கியது.

நவீன் ஓடி வந்து என் அருகில் நின்று என்னையே பார்த்துக் கொண்டிருந்தான் . தூக்கி மடியில் போட்டுக் கொண்டேன். ஏதேதோ கதைகளைப் பேசியபடி தூங்கிப்போனான்.

காலை எழுந்து பார்த்த பொது செடிகள் எல்லாம் ஒன்றாக சேர்க்கப்பட்டு நடப்பட்டிருந்தது. நவீன் அதற்கு தண்ணீர் ஊற்றி கொண்டிருந்தான். என்னை திரும்பி பார்த்து புன்னகைத்த அவன் கேட்டான் “சித்தி நீ பூவோட அம்மாவா ?” என்றான் . ஏன் அப்படிக் கேட்டான் எனப் புரியாமல் ஆச்சர்யமுடன் அவனையே திருப்பி என்ன என்று கேட்டேன். “இல்ல சித்தி நேத்து..... இந்த செடி எல்லாம் செத்து போச்சுன்னு தானே நீ அழுத? நீ இதுக்குதான் அம்மாவா ? எனக்கு இல்லயா ?” என்றான்.

காலை சூரியனை விட மிக தீட்சண்யமாய் இருந்த அந்த சிறு குழந்தையின் கேள்வியால் எனக்கு வெட்கமாகவும், அதே சமயம் ஏதோ புரிந்தது போலவும் உணர்ந்தேன்.
அந்த செடிகளுடன் எனக்குண்டான பிணைப்பையும், பாசத்தையும், உணர்வுகளையும் நான் சொல்லாமலே எனது கண்ணீர் துளிகள் மூலம் எப்படி இந்த குழந்தை புரிந்து கொண்டது ?!?!?!

சாதாரணக் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதே சில நேரம் கடினமாய் இருக்கும் போது நீங்கள் எப்படி மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கு பாடங்களை புரிய வைக்கிறீர்கள் என பல நேரங்களில் பல ஆசிரியர்கள் வியப்புடன் கேட்கும் போதெல்லாம் மனதின் எங்கோ ஒரு மூலையில் தலை தூக்கிப் பார்த்திருந்த கர்வத்தை எல்லாம் ஓங்கி அடித்து விட்டான் இந்தக் கண்ணன்.

“உள்ளத்தி லேகரு வங்கொண்ட போதினில்
ஓங்கி யடிதிடுவான் - கண்ணன் …”
(கண்ணன் என் தோழன் -பாரதியார் )

இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு மீதமிருந்த பாடங்களை சிறு சிறு கதைகளாகவும் , சித்திரப் பாடங்களாகவும் சேகரித்து தொகுத்து முடித்தேன்.

நவீன் சுற்றி சுற்றி வந்து என்னுடன் பாடிக்கொண்டிருந்தான் …
நான் : சித்தியோட செல்லம் யாரு ?
நவீன் : நான் …
நான் : சித்தியோட தங்கம் யாரு ?
நவீன் : நான்
நான் : சித்தியோட வைரம் யாரு ?
நவீன் : நான்
நான் : பூவோட அம்மா யாரு ?
நவீன் : நீ …
நான் : பூ யாரு ?

நவீன் : நான் .....

Thursday, May 13, 2010

முகங்கள்


தயான் மடியில் உறங்கிக்கொண்டிருந்தான். இந்த உலகத்தின் அமைதியை எல்லாம் தனது இமைகளில் கொண்டு… இரு கைகளாலும் என் விரலை இறுகப் பற்றிக்கொண்டிருந்தான். மணி நான்கடித்தது. கடிகாரம் பார்த்துத் திரும்புகையில் யதேச்சையாக கண்கள் அந்த ஓவியத்தில் பதிந்தது. கண்ணன்! வெண்ணெய்த் தாழி உடைத்து இதழ்களில் வெண்ணெயும், கண்களில் குறும்பும் வழியப்பார்க்கும் கண்ணன். குனிந்து மடியில் இருந்த குழந்தையைப் பார்த்தேன். மலரினும் மெல்லிய இதழ்களில் அருந்திய பால் கொஞ்சம் வடிய தூக்கத்தில் சிரித்துக் கொண்டிருந்தான். ஒரு கணம் மெய் சிலிர்த்ததெனக்கு! ஓ!!! இது கடவுளின் தரிசனம்! நான் தரிசித்தேன் .
தூங்கும் குழந்தையை ரசித்தால் கண் படுமென அதட்டிய அம்மா கடைக்கு அனுப்பி வைத்தார். கர்ப்பத்தில் தயானின் முகம் எப்படி இருந்திருக்கும்? யோசித்துக்கொண்டே மின் தூக்கியிலிருந்து வெளியேறி கீழ்த்தளம் அடைந்தேன். எங்கிருந்தோ பியானோ இசை வருடிச் சென்றது. வாசிப்பவர் முகம் எப்படி இருக்கும்? முகம் என்பது கடவுளின் படைப்பில் எவ்வளவு விசித்திரமானது! கொஞ்ச தூரம் நடந்தால் அட்மிரல்டி ரயில் நிலையம் வரும். கீழேதான் தினசரி காய்கறி அங்காடி. யோசித்தபடியே அதை நோக்கி நடந்தேன்.
அலுவலகம் முடிந்து பல முகங்கள் என்னை கடந்து சென்று கொண்டிருந்தன. தலையை போர்த்தி மூடிச் செல்லும் மலேயாப் பெண்கள் … மஞ்சள் நிறமும் குட்டிக் கண்களும் கொண்ட சீனப் பெண்கள்…. பெரியவர்கள், குழந்தைகள் இன்னும் எத்தனையோ முகங்கள். உண்மையில் முகங்கள் உறுப்புகளின் கோர்வை மட்டும் தானா? எனில் இடிந்து சிதைந்த மாளிகைகள் கம்பீரமானதோர் கைம்பெண்ணின் முகத்தையும், கட்டுகடங்காத காவிரி இளமை துள்ளும் கன்னிப் பெண்களையும், பச்சை வயல்வெளிகள் குலுங்கி சிரிக்கும் குழந்தைகளையும் நினைவிற்கு கொண்டு வருவதேன்? என்னைப் பொறுத்தவரையில் முகம் என்ற அடையாளம் உணர்வுகளின் பிரதிபலிப்பும் உணரப்படுதலும்தான். அதனால்தான் இந்த உலகின் எல்லாவற்றுக்கும் ஒரு முகம் இருப்பதாக எனக்கு தோன்றுகிறது.
அக்காவின் பிரசவத்திற்கு துணையாக அம்மாவுடன் இங்கு வந்ததிலிருந்து இந்த முகம் பார்த்தல் புத்தகம் படிப்பதைப் போல வெகு சுவாரஸ்யமான பொழுது போக்காகிப் போனது. இருப்பினும் மிக நீண்ட காலமாக எனக்குள் நிறைவேறாமலே இருக்கும் ஆசை எங்கள் ஊர் திருடனின் முகத்தைப் பார்க்க வேண்டும் என்பதுதான். எந்த பொழுதுபோக்கு அம்சமும் இல்லாத, தபால் நிலையம், பஞ்சாயத்து அலுவலகம், கோவில் என ஒன்றிரண்டு இடங்களில் மட்டுமே எரியும் மஞ்சள் பல்புகளைத் தவிர மின்சார வசதிகள் அதிகம் இல்லாத அந்த காலகட்டத்தில்… திருவிழா காலத்திலோ கோடையின் வறட்சியான காலங்களிலோ ஊருக்குள் வந்து போகும் திருடன்தான் சிறுவர்களாகிய எங்களுக்கு மிகப் பிடித்த கதாநாயகன்.
அந்த நாட்களில் மக்கள் திருடனுக்குப் பயந்து வாசல் thinnaiyil , கயிறு கட்டில்களில் வானம் பார்த்தபடி படுத்துக்கொல்லுதல், எங்கு சென்றாலும் இரண்டு மூன்று பேர்களாகவே சேர்ந்து செல்லுதல், என ஊர் மக்களின் நெருக்கத்தை திருடனின் வருகை இன்னும் அதிகரிக்கவே செய்தது. அப்பொழுதுகளில் பரிமாறிக்கொள்ளப்படும் திருடன் பற்றிய கதைகள் வெகு ரசமானவை. அவை பெரும்பாலும் தாத்தாக்களும், பாட்டிகளும் அப்பாக்களும் கண்டு கேட்ட, அல்லது அனுபவித்த, திருடனைப் பிடிக்க ஏற்றுக் கொண்ட பங்காகவுமே irukkum
திருடனைப் பிடிக்க பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டாலும், திருடன் பற்றிய செய்திகள் உண்மையாகவோ, பொய்யாகவோ இருந்தாலும், எந்த வருடமும் திருடனைப் பிடிக்கவே முடியாவிட்டாலும், திருடன் வரும் காலம் என்பது பட்டாம்பூச்சிகளை எதிர்நோக்கியிருத்தல் போல பழக்கமாகிப் போன ஒன்றாகிப் போனது. இத்தனைக்கும் காரணமான அந்த திருடன் என்பவன் ஊரில் எப்படி ? எங்கே ? என்ன செய்து கொண்டிருப்பான் ? ஒருவேளை எங்களுள் ஒருவனாக இருந்துகொண்டு எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு கூட இருந்திருக்கலாம். காய்கறிகள் வாங்கிவிட்டு திரும்பினேன். இரவு நேர வேலைக்குச் செல்லும் மக்கள் கூட்டம் காத்திருந்தது. எந்த நேரத்திலும் உற்சாகமான மக்கள் !!!
குடிமக்களை குழந்தைகளைப் போல பார்த்துக்கொள்ளும் தலைவனின் தேசத்தில் மக்கள் இப்படித்தான் இருப்பார்கள் போலும் !! வழியில் மெக்டொனல்ஸ் தாண்டிச் சென்றால் சிறு அங்காடி வரும். பழங்களும் கொஞ்சம் மலர்களும் வாங்க உள் நுழைந்தேன். பதினைந்து வெள்ளிக்கு மேல் பொருட்கள் வாங்கியதால் பணம் செலுத்திய ரசீதுடன் சிறு ஸ்டிக்கர் ஒன்றைக் கொடுத்தாள் பணிப்பெண். இந்த மாதக் கணக்கின் அந்த சிறு அட்டையில் மீதமிருக்கும் ஒற்றைக் கட்டத்தில் இந்த ஸ்டிக்கரை ஒட்டி கடையில் கொடுத்தால் அடுத்த மாதம் தயானுக்கு தேவையான குழந்தைகளுக்கான பொருள் ஏதேனும் ஒன்றை சலுகை விலையில் வாங்கிக் கொள்ளலாம்.
பத்திரப்படுத்தியபடி வெளியேறினேன் . வாசலில் அந்த முதியவள் நின்றிருந்தாள். அங்கே அவரை நான் பலமுறைப் பார்த்திருக்கிறேன். அவரைப் பார்க்கும்பொழுது மட்டும் மனதுள் ஏதோ இனம் புரியாத மனதை வருத்தும் உணர்வேற்படும். கடந்து சென்ற என்னை நிற்க சொன்னார். மிக மிக தயக்கத்துடன் மென்மையாகக் கேட்டாள். “ உனக்கு அந்த ஸ்டிக்கர் வேண்டுமா?” என்று. உள்ளுக்குள் ஏதோ ஒன்று உடைந்து வலித்தது. இதுவும் ஒரு வகையான யாசகம்தனே? இந்த நாட்டிலும் இப்படியும் சிலர் இருக்கிறார்கள். பெரும்பாலும் இவர்கள் பெற்றோர்களால் புறக்கணிக்கப்பட்ட குழந்தைகளின் paattiyaakavo, அல்லது பெற்ற பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்ட தாயாகவோ இருப்பார்கள். அரசு உதவிகளும், சுய சம்பாத்தியமும், இருந்தும் போதாத செலவுகளுக்காக இவர்கள் இதைப் போன்ற அங்காடிகளில் ஸ்டிக்கர்கள் சேமித்து தங்களுக்கு தேவையான ஏதோ ஒன்றை வாங்கிச் செல்கிறார்கள்.
அக்காவின் பணத்தை தானம் செய்ய மனமின்றி ஒற்றை தலையசைப்பில் அவருக்கு மறுப்பு சொல்லிவிட்டு வீடு திரும்பினேன். அதன் பின்பு வெகு நாட்களுக்கு கண்ணாடியில் தெரிந்த என் முகம் மிகக் கோரமானதாகவே இருந்தது.....

Saturday, April 24, 2010

தவறுகள்...


“ …இளவரசியை மீட்பதற்காக தேஜு இளவரசன் ஒளித்துவைக்கப்பட்ட மாயாவின் புல்லாங்குழலைத் தேடிக்கொண்டு போனான்…. நண்பனுக்கு செய்த துரோகத்தை நினைத்து குகை மண்டபத்தோடு தன்னையே சிறை வைத்துக்கொண்டு பாபி இறந்து போனான் ….”
எப்பொழுதும் எனக்குப் புரியாத கதைகளையே அத்தை சொன்னாலும், பவள மல்லிகளையும் , நித்ய மல்லிகளையும் குடலையில் சேகரித்த வண்ணம் அவளது புடவைத் தலைப்பை பிடித்துக்கொண்டு கதைகளைக் கேட்பதில் அலாதி ப்ரியம் எனக்கு. தலைமுறை தலைமுறையாக வாழ்வின் நெறிகளையும் ஒழுக்கங்களையும் , அவற்றின் முக்கியத்துவத்தையும், குழந்தைகள் மனதில் விதைக்கும் மாபெரும் பணியை பாட்டிகளும், அத்தைகளும் , சித்திகளும் , நிலைவைக் காட்டிக்கொண்டோ , சாதம் ஊட்டி விடும்போதோ மிக இயல்பாக செய்து முடிக்கிறார்கள் கதைகள் மூலம்.
என்னதான் கதைகள் கேட்டாலும், பள்ளியின் கட்டாயமாக்கப்பட்ட நன்நெறிக்கல்வி பாடங்களைப் பயின்றாலும், சிறு வயதில் ஒரு விஷயம் மிகக் குழப்பமானதாக இருந்தது. அது பெரும்பாலும்

சரி, தவறு என்றால் என்ன?
யார், யார் எந்தெந்த தவறுகள் செய்ய அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்?
ஏற்றுக்கொள்ளப்பட்ட தவறுகள் எவை ?
தவறு செய்தால் ஏன் அடிக்கவோ, திட்டவோ செய்கிறார்கள்?
என்பது பற்றியதாகவே இருக்கும்.
“ கனியிருப்பக் காய்கவர்ந்தற்று...” யாரையும் புண்படுத்தி பேசக்கூடாது என கருட புராண தண்டனைகளை எல்லாம் உதாரணமாக சொல்லித் தரும் பாட்டி ஏன் அம்மாவை எப்போதும் திட்டுகிறாள், அழவைக்கிறாள் என்பது குழந்தை மனதிற்கு புரிவதே இல்லை.
தேஜு இளவரசன், குட்டி தேவதைகள் , விக்ரமாதித்தன் என எத்தனையோ கதைகள் சொல்லி மனதை இனம் புரியாத உணர்வில் ஆழ்த்தும் அத்தை ஒரு மதிய நேரத்தில் அத்தானின் சட்டையை மாட்டிக்கொண்டு அவரது கட்டிலுக்கு மேலேயே தூக்கு மாட்டிக் கொண்டதும் …. ஆனால் அந்த சம்பவத்தின் எந்த பாதிப்பும் தாக்காமல் அத்தான் இருந்ததும் ஊரையே அதிரச் செய்த நிகழ்வுகள். அத்தை யாரை தண்டிப்பதற்காக அப்படிச்செய்தால் ? மகனையா ?!!? மருமகலையா? அத்தகைய தண்டனையை பெற்ற உள்ளம் எப்படிப்பட்டதாக இருக்கும்?
தினசரி செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சியிலும், செவி வழிச் செய்தியாகவும், கொலை , திருட்டு மற்றும் இன்னபிற குற்றங்களையும் அவற்றுக்கான நீதிமன்ற வழக்கு விசாரணைகளையும் கேள்விப்படுகிறோம்.
“மனிதக் கொலைக்கு தண்டனை. மனத்தின் கொலைக்கு ?????”
தனி மனித ஒழுக்கமும், சமூக வாழ்க்கை முறைகளும் கலாச்சார அடிப்படையில் ஊருக்கு ஊர், ஏன் ஒவ்வொரு நபர்களுக்குமே வேறுபடுகையில்… உண்மையில் தவறுகள் தண்டிக்கத்தக்கவையா ? கண்டிக்கத்தக்கவையா? இவற்றின் சரியான அளவீடுதான் என்ன? முன்னோர்கள் கற்பித்த இதிகாசங்களும்…. சான்றோர்களின் வாழ்கை குறிப்புகளும்… சந்தற்பங்களுக்கேற்ப தவறுகளை, தண்டனைகளை நியாயப்படுத்தியும் குற்றம்சாட்டியும் , வாழ்க்கை கோட்பாடுகளை எடுத்துரைக்கின்றன. நாமோ ஒவ்வொருவரும் தவறு செய்துகொள்ள நமக்குரிய உரிமையை நிலைநாட்ட எங்கோ, எப்பொழுதோ, எப்படியேனும் செய்துகொண்டிருக்கிறோம் தவறுகளை தினமும்.
இப்படி செய்தது சரியா? தவறா? என்ற கேள்வி என் முன்பு வைக்கப்படும்போது நான் சிந்தித்துப் பார்கிறேன். அதை எப்பொழுதேனும் நான் செய்திருக்கிறேனா? ஏன்? எப்பொழுது? அதன் பதிப்புகளை எப்படி கடந்து வந்தேன்? அல்லது என்னை சார்ந்தவர் அத்தகைய தவறை செய்திருக்கிறார்களா? எனில் அவர்களை சகித்துக் கொள்வதன் மூலம் செய்யப்பட்ட தவறை நானும் அங்கீகரிக்கிறேன் இல்லையா? செய்த தவறை மீண்டும் செய்திட நேரும் தருணங்களில் மனதின் குரூரம் அடக்கி சூழ்நிலையை வெல்லும் திறமை எனக்கு சாத்தியமெனில் தவறுகள், தண்டிக்கவோ, கண்டிப்பதற்கோ உரியவை அல்ல. படிப்பினையை தந்து மானுடத்தை பண்படுத்தும்… மதிப்படையச் செய்யும் வாய்ப்புகள். சரியானபடி கையாண்டால்!!!!
























Friday, April 16, 2010

சொர்க்கமே என்றாலும்...


அறந்தாங்கி செல்லுதல் என்பது புதுக்கோட்டை, காரைகுடியிலிருந்தோ, திருச்சியிலிருந்தோ பேருந்தில் ஏறும்போதே தொடங்கிவிடுகிறது. நடத்துனரிடம் பயணச்சீட்டு வாங்கும்போதே வாகைமரம் ஸ்டாப் என்று அழுந்த சொல்ல வேண்டும். ஊரின் தலைவாசலான வாகைமரம் ஸ்டாப் முக்கியமானதாகக் கருதப்பட பல காரணங்கள் உண்டு. வலையல்காரத் தெரு, கொட்டில்காரத்தெரு , அங்காளம்மன் கோவில் தெரு , வீரமாகாளி அம்மன் கோவில் தெரு , மேலத்தெரு , கோட்டை வீதிகள் என பல தெருக்களை இணைப்பதோடு மட்டும் அல்லாமல் பொற்குடையார் கோவில் தாண்டிய மூக்குடி மற்றும் சில சிறு கிராமங்களிலிருந்து மக்கள் ஊருக்குள் நுழையவும் வெளியேறவும் பேருந்துக்காக வாகைமரம் ஸ்டாப்பில்தான் காத்திருக்க வேண்டும்.
ஒன்றிரண்டு பேருந்து வசதி மட்டுமே கொண்ட அந்தக்காலத்தில் காத்திருக்கும் பொழுதுகளை சுவராஸ்யமானதாக்க ஊரின் அத்தனை விஷயங்களும் அங்கே பரிமாறப்படும். வசதியாக அருகிலேயே அகழி தாண்டிய சத்திரம், கதிரேசன் மாமா டீக்கடை அப்பம். ஊரின் எந்த ஒரு முக்கிய தகவலும் வாகைமரம் தாண்டாமல் வரமுடியாததாகையால் அது ஒரு முக்கிய செய்தி ஒலிபரப்பு ஸ்தலமும் ஆனது. காலப்போக்கில் யாரேனும் தன்னைப் பற்றி ஜம்பமாகப் பேசிக்கொண்டால் கிண்டலாக “… ஆமாம் ஆமாம் வாகைமர ஸ்டாப்ல நாலு பேர் பேசிக்கிட்டாஹ…” என்று சொல்லும் அளவுக்கு பிரசித்தமாகிப்போனது.
இப்பேர்ப்பட்ட வாகைமரம் ஸ்டாப்பை ஏனோ நடத்துனர்களுக்கு பிடிப்பதேயில்லை. எப்போது அங்கே இறங்க வேண்டும் என்றாலும் செக்போஸ்டிலேயே எழுந்து பெட்டிகளை எடுத்துக்கொண்டு தயாராக படிக்கருகே நிற்க வேண்டும். அலறும் பாட்டு சத்தம் மீறி சக பிரயாணிகள் உயிரைக் கொடுத்து கத்தி படிப்பிரயாணிகள் பஸ்சின் வெளிப்புறம் தட்டி நிற்கச் செய்தால் பெரும்பாலும் அது வாகைமரம் தாண்டி பாலையா அண்ணன் முடிதிருத்தும் கடை அருகிலோ , வி. எஸ் தியேட்டர் தெரு அருகிலோ போயி நிற்கும்.
ஒரு வழியாக ஊருக்குள் வந்து இறங்கியாகிவிட்டதா? இனி ஊரின் தினசரி காட்சிகள் தெருக்குழாயில் தண்ணீர் பிடிப்பதிலிருந்து ஆரம்பமாகும். எப்போதும் தெருக்குழாய் தண்ணீரின் சர்வாதிகாரி கொட்டில்காரத் தெரு ரெங்கம்மா அக்காதான். பெரும் குடித்தனகாரியான அவள் தண்ணீர் பிடித்த பின்புதான் மற்றவருக்கு என அடம் செய்வாள். அவள் வாய்க்கு பயந்தவர்கள் பின்வாங்கிட மல்லுக்கு நிற்பவர்களால் தெருவே ரெண்டுபடும். அப்பாவின் நண்பரான சோமு மாமா எங்கே குழையடி சண்டை நடந்தாலும் எல்லா வேலைகளையும் போட்டுவிட்டு ஓடிப்போய் வேடிக்கை பார்ப்பாராம். ஏனெனில் தெருப் பெண்களின் ரகசியங்கள் எல்லாம் அங்கு குட்டு உடைகப்படுமே.
அடுத்ததாக தெருவிற்கு வரும் சிறு வியாபாரிகளிடம் தொடங்கும் மீன் பேரம், பட்டை விறகு பேரம் , எறால் பேரம் என சிறு போராட்டங்களோடு முடியும் வீட்டுத் தேவைகள். பின்பு அறந்தாங்கி அரசு மற்றும் பொது சேவை காரியாலயங்கள். வாய் உள்ளவர்கள் மட்டுமே இங்கே காரியம் நடத்திக்கொள்ள முடியும். ஏனோ தெரியவில்லை கொம்பு முளைத்துக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் அலுவலக அதிகாரிகள். உதாரணமாக மின்வாரிய அலுவலகத்தின் மாடியில் ஒருவர் இருக்கிறார். அவரிடம் சென்று ஏதேனும் தகவல் கேட்டால், முக்கி...., முனகி... நாற்காலியில் அசைந்து.... கோப்பிலிருந்து கண்களை அகற்றி...., மூக்கு கண்ணாடி மேல் வழியாக நம்மைப் பார்த்து… புருவம் உயர்த்தி.... அசைத்து… அடுத்த மேசையில் கேள் என நயன பாஷையில் பதிலளிப்பார்?!?!?!?!. மக்களுக்காக வேலை பார்க்கும் இவர்களின் இந்த தனித்த முத்திரை பல தடவை பட்ட பிறகுதான் புரிந்து போனது.
இன்னும் வங்கிகள், மருத்துவமனைகள், தபால் நிலையம் என நீளும் வாழ்க்கை தேவைகளுக்கான போராட்டம். இருப்பினும் ஒரு நாளின் ஒரு பொழுதை போக்கும் அயர்வையும், எரிச்சலையும், போக்க பல விஷயங்கள் இங்கும் இருக்கத்தான் செய்கின்றன. வீரமாகாளி அம்மன் கோவில் தேர், தெப்ப விழாக்கள், அப்போது கலை கட்டும் பெரியகடை வீதி, மீராக்கடை வளையல்கள் , மங்களம் ஸ்டோர் ஜவுளிகள், சுந்தரம் பேக்கரி தின்பண்டங்கள், பங்குனி உத்திரம் பொற்குடையார் கோவில் திருவிழா, நண்பர்கள் நற்பணிக்குழு தண்ணீர் பந்தல் ,… மேலும் அட்டகாசமான சில மனிதர்கள். கொட்டில்கார தெரு குட்டை தத்தா என்று ஒருவர் இருந்தார். காதல் திருமணம் செய்த புதிதில் அவர் செய்த ரகளை ஏராளம். பிறக்கும் குழந்தை தன்னைப்போலவே குட்டையாக இருந்தால்தான் தன பிள்ளையென நம்புவேன் என்று சண்டை போட பத்தினி அவளும் அப்படியே பெற்றெடுத்தாள். குட்டை அண்ணா இப்போது பாபு மெடிக்கலில் வேலை பார்க்கிறார்.
அடுத்து கொஞ்சும் சலங்கை விளம்பர வர்த்தக நிலையம் நடத்தும் “புளிச்சட்டி“ மணி அண்ணன் (அவர் தாத்தா புளி வியாபாரம் செய்த செட்டியாராம் காலப்போக்கில் மருவி அதுவே அவர் பெயரானது ). மிக வித்தியாசமாக , வேடிக்கையாக விளம்பரம் செய்வார். டெப்போ வேன்களில் பழங்களோ, தின்பண்டங்களோ விற்பனைக்கு வந்தால் அங்கே பொருட்கள் வாங்க தள்ளு, முள்ளு நடந்து கொண்டிருப்பதைப்போன்ற பிரேமையை தன்னுடைய விளம்பர பாணியில் தோற்றுவிப்பார் . “ அந்த சிவப்பு புடவை அக்காவுக்கு ஒரு கிலோ போடுப்பா..” “அண்ணே அவசரப்படாதீங்க எல்லோருமே வாங்கலாம்…” என்றெல்லாம் ஒலிப்பெருக்கி தூள் பரப்பிக்கொண்டிருக்க அங்கே ஒருவர் மட்டுமோ, அல்லது யாருமே கூட இருக்கமாட்டார்கள். இப்படியாக எங்கள் ஊரின் விசித்திர மனிதர்கள் அநேகம் பேர்.
நிறையப்பேர் சொல்கிறார்கள் அறந்தாங்கியில் கல்வி வசதி இல்லை, புழுதியான தெருக்கள், பேருந்தில் நெரிசல், நாகரீகம் போதா மக்கள், இன்னும் எத்தனை எத்தனை, எரிச்சல்கள்குறைகள். இருப்பினும் எவ்வளவோ வசதிகள் கொண்ட பெருநகரங்களில் veli naattu வாழ்க்கை எனும் வனவாசத்தில் கழிந்த ஒவ்வொரு இரவின் தூக்கமும் அறந்தாங்கியில் தான் தூங்குகிறோம் என்ற கனவோடுதான் kazhinthirukkirathu . குழந்தையாய் இருக்கும்போது நினைத்துக்கொள்வேன் “ வானம் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமாக, கட்டம் போட்ட வானம் , பல வண்ணங்கள் கொண்ட வானம் , என்று ஊருக்கு ஊர் தனித்தனி வானம் இருக்கும் என. ஆனால் இன்றும் அப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது. நியான் விளக்கு வெளிச்சம், பேருந்தின் புகை, நகரத்தின் புழுக்கம் இவையெல்லாம் மறைக்காத தெளிந்த, நட்சத்திரங்கள் நெருக்கமாக இறங்கி வந்திருக்கும் என் வானம் என் அறந்தாங்கியில், என் வீட்டு மொட்டை மாடியில்தான் இருக்கிறது இப்பொழுதும் தாலாட்டும் அமைதியோடு.
அதிகாலை எழுந்து படிப்பு, வேலை என ஊரைப் பிரிந்து ஹாஸ்டல் செல்லும் போதும், திருமணமாகி கணவர் கைப்பிடித்து பெட்டியோடு பேருந்து நிறுத்தம் நோக்கி நடக்கையில் சட்டென மனது பாரமாகி தடுமாறும். மெல்லென வருடும் தென்றலில் தெரியும் நுரையீரல் புகுந்து, நாடி நரம்பெல்லாம் கலந்திருக்கும் ஊரின் வாசனை. கண்ணை மூடி நடந்தாலும் தெருக்களின் வளைவு, நெளிவு, மேடு, பள்ளம் உணர்த்தும் அன்னை மடி போன்ற சுகமான பிறந்த மண்ணின் மடி . பேருந்து ஏறி ஏக்கமாய் திரும்பிப் பார்க்கையில் மௌனமாய் விடைகொடுக்கும் ஊரென்ற அன்னையின் முகம். உருண்டு விழும் ஒரு துளி கண்ணீர் சொல்லும் “… தாயே உலகின் எந்த கோடிக்கு சென்றாலும் இறுதியாய் அடைக்கலாமாவேன் உன்னிடமே…”
மீண்டும் மீண்டும் மனதில் ஒலிக்கும் அந்தப் பாடல் “...சொர்கமே என்றாலும் அது நம்மூரைப்போல வருமா ?…”